ஒப்புதல் தந்த ஆளுநர்.. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 5 பேர் நியமனம்! யார் இவர்கள்? தமிழக அரசு உத்தரவு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்ய ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.


இதையடுத்து 5 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்கள் யார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்வுகள், நேர்க்காணல் நடத்தி இந்த தேர்வாணையம் அரசு பணிக்கு ஆட்களை சேர்த்து வருகிறது.


டிஎன்பிஎஸ்சியை பொறுத்தமட்டில் ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால் நீண்டகாலமாக டிஎன்பிஎஸ்சிக்கு தலைவர் இல்லாத நிலை இருந்தது. மேலும் 14 உறுப்பினர்களுக்கு பதில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். இதனால் டிஎன்பிஎஸ்சியின் செயல்பாடு மிகவும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.


அதாவது போட்டி தேர்வில் குளறுபடி, தேர்வு முடிவுகளில் காலதாமதம் செய்தல் உள்ளிட்டவை ஏற்பட இதுவே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால் தான் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்களை முறைப்படி நிரப்ப வேண்டும் என அரசு பணிக்கான தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதனை தமிழக அரசும் பரிசீலனை செய்தது.


டிஎன்பிஎஸ்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் செய்ய ஆளுநராக இருப்பவரின் ஒப்புதல் என்பது தேவையாக உள்ளது. இதனால் தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராகவும், மேலும் 8 பேரை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாகவும் நியமிக்க ஆளுநர் ஆர்என் ரவிக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.


ஆனால் ஆளுநர் ஆர்என் ரவி அந்த கோப்புகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த பொறுப்புகளுக்கான விண்ணப்பம் குறித்து கேட்டும், வெளிப்படைத்தன்மை இல்லை என தெரிவித்தும் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்க மறுத்தார். இந்நிலையில் தான் தற்போது டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


அதாவது டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 5 பேரை நியமனம் செய்ய ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அதுதொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 



அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவன் அருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார், டாக்டர் தவமணி, உஷா சுகுமார், பிரேம் குமார் உள்ளிட்டோரும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவி வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நியமனம் இப்போது செய்யப்பட்டு இருந்தாலும் கூட இன்னும் டிஎன்பிஎஸ்சியில் தலைவர் மற்றும் 5 உறுப்பினர் பொறுப்புகள் காலியாக உள்ளன. தற்போதைய சூழலில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பொறுப்பை உறுப்பினர் முனியநாதன் கூடுதலாக கவனித்து வருகிறார். 


இருப்பினும் கூட இப்போது 5 பேர் புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் டிஎன்பிஎஸ்சி செயல்பாடு என்பது அதிகரிக்கும் என அரசு பணிக்கான போட்டி தேர்வர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog