10 ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வில் தவறான கேள்வி: உரிய மதிப்பெண் வழங்கக் கோரிக்கை!




தமிழகத்தில் இன்று (மார்ச் 26) நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்பாட வினாத்தாளில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு உரிய மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் ஆசிரியை சுகிர்தராணி தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.


இந்த தேர்வினை மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் என 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.


இந்த தேர்விற்காக மாநிலம் முழுவதும் 4,017 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் தேர்வாக, தமிழ் நடைபெற்றது.


இந்த தேர்விற்காக கொடுக்கப்பட்ட வினாத்தாளில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய மதிப்பெண் கொடுக்கவும் ஆசிரியை சுகிர்தராணி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ஆசிரியையும் சமூக செயற்பாட்டாளருமான சுகிர்தராணி தனது சமூக தளப் பதிவில், "இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்ப்பாட வினாத்தாளின் 33வது வினாவில் 'நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த' என்று வருகிறது.


இது பிழையான வினா. 'நெடுநாளாக பார்க்க எண்ணியிருந்த' என்று வர வேண்டும்.


எனவே, இந்த பிழையான வினாவிற்குரிய 3 மதிப்பெண்ணை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog