ஆசிரியை உமா மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்தது ஏன்? வெடித்த சர்ச்சை.. பள்ளி கல்வி இயக்குனர் விளக்கம்




செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம், அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் உமா மகேஸ்வரியை தற்காலிக பணி நீக்கம் செய்தது ஏன் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரனுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி விளக்கம் அளித்துள்ளார்.


செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கல்வித்துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றி அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். மேலும் கல்வி சூழல்கள் குறித்து புத்தகங்களும் எழுதி உள்ளார்.


 


இவர் சமூகத்தில் கல்வி கொள்ளைகள் குறித்து புரிதலை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி கட்டுரைகளை எழுதி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர் சங்கங்கள் மூலம் அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தாராம். இந்நிலையில், பள்ளிக்கல்வி குறித்து தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் சில கட்டுரைகளை அண்மையில் எழுதி இருந்தார். இது அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார்கள் பறந்தன.


அந்த புகாரின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம் வெளியிட்ட அந்த உத்தரவில், "ஆசிரியை உமா மகேஸ்வரி வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசிற்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் எதிராக கருத்துகளைப் பதிவு செய்து வந்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறியும், பொது இடங்களிலும் அரசிற்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து மார்ச் 6ஆம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார் என்று அறிவிப்பில் கூறியிருந்தார்.


மேலும், அவர் முறையான அனுமதி பெறாமல் செங்கல்பட்டு மாவட்டத்தை விட்டு வெளியூர்களுக்குச் செல்லக் கூடாது என்றும் பணியிடை நீக்கம் காலத்தில் இருக்கும்போது அவருக்கு எந்தவிதமான பயணப்படியும் கொடுக்கக் கூடாது" என்றும் தனது உத்தரவில் கூறியிருந்தார்.


இதனிடையே ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு, மக்கள் கல்வி கூட்டியக்கம், மக்கள் அதிகாரம் அமைப்பு , இடதுசாரிகள் உள்பட பலர் கண்டித்துள்ளனர். இதேபோல் சமூக வலைதளங்களிலும் ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலரும் கண்டித்துள்ளனர். சீமான் வெளியிட்டிருந்த பதிவில், திமுக அரசை விமர்சிக்கக்கூடாதா? தவறான செயல்பாடுகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.


டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த பதினைந்து நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேச முன்வராத திமுக அரசு, கல்வித்துறையில் நிகழும் குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியிருந்தார்.


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், தமிழகக் கல்விப் பணி சிறக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தனது கருத்தை ஆசிரியை உமா மகேஸ்வரி கூறினால், அதனை ஆய்ந்து அதன்படி சீர் செய்வதை விட்டுவிட்டு, அந்த ஆசிரியரை இடை நீக்கம் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியிருந்தார். பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், நெல்லிக்குப்பம், அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் உமா மகேஸ்வரியை தற்காலிக பணி நீக்கம் செய்தது ஏன் என்ற காரணத்தை விளக்கத்துடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரனுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி கடிதம் அனுப்பி உள்ளார்.


அந்த கடிதத்தில் ஆசிரியர் உமா மகேஸ்வரி சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கும், கல்வித் துறைக்கும் எதிராக வாட்ஸ் அப், முகநூல் (பேஸ்புக்) போன்ற சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டுள்ளார். இந்த கருத்துகள் அரசை விமர்சிப்பதாகவும், அரசின் செயல்பாடுகளை அவதூறு செய்வதாகவும், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களை அரசுக்கு எதிராக போராடத் தூண்டும் வகையிலும் இருப்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்.


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கம் இருக்கிறது, கல்வி பிரச்சினைகளுக்கு மக்கள் மறியல் செய்ய ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?, பள்ளிகள் தனியார் கைகளில் முழுமையாக ஒப்படைக்கும் நிலை வெகு விரைவில் வரப்போகிறது. இதை பற்றி பேச யாரும் தயாராக இல்லை என்பது உள்பட 34 வகையான பதிவுகளை ஆசிரியை உமா மகேஸ்வரி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்ததாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Comments

Popular posts from this blog