சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ஓராண்டு நிறைவு... பணி நியமனம் எப்போது? பட்டதாரி ஆசிரியர்கள் 'திடீர்' உண்ணாவிரதம்!
இடைநிலை ஆசிரியர்களை போல் ஜூலை மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதி, சான்றிதழ்கள் சரி பார்ப்பு முடித்தவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்
பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடித்தவர்கள் பணி நியமன ஆணை வழங்கக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. 3,192 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 13, 2023 வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் 2024 பிப்ரவரி 4 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 40,136 பேர் எழுதினர்.
எழுத்து தேர்வு முடிவுகள்
ஒஎம்ஆர் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் 2024-ம் ஆண்டு மே 18 ஆம் தேதி மற்றும் மே 22 ஆம் தேதி பாட வாரியாக இணையதளத்தில் வெளியிட்டது.
சான்றிதழ் சரிபார்க்கும் பட்டியல்
தேர்வு எழுதிய தேர்வர்களின் ஒஎம்ஆர் மதிப்பெண்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டில் (2) தகுதி பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்களை (Weightage marks) சேர்த்து, மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில், பாடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஆண்டு சென்னையில் மே 30, 31 ஆம் தேதிகள் மற்றும் ஜூன் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
ஆனால், அதற்கு பின்னர் எந்த முன்னேற்றமும் இல்லை. சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடிந்து ஓராண்டு ஆகியும் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள், வரும் 14 முதல் 18-ந் தேதி வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்குவது போல், தங்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர் ஒருவர் பேசுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி வழங்குவது போல் ஜூலை மாதத்திற்குள் தங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment