TNPSC GROUP 4: ஆப்சென்ட் மட்டும் இத்தனை லட்சம் பேரா? கட் ஆப் எப்படி இருக்கும்? ஒரு இடத்திற்கு எத்தனை பேர் போட்டி
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இன்று நடைபெற்ற டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வை எழுதாமல் சுமார் 2 லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
3,935 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் கட் ஆப் மதிப்பெண் எப்படி இருக்கும்?, ஒரு இடத்திற்கு எத்தனை பேர் போட்டி? என்பது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடைபெற்றது. விஏஒ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வர்களில் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது இந்த குரூப் 4 தேர்வுதான்.
குரூப் 4 தேர்வு
ஏனெனில், பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்பதால் கடுமையான போட்டி இந்த தேர்வுக்கு உள்ளது. போட்டித் தேர்வில் தேவையான கட் ஆஃப் எடுத்தால் போதும். வேலை நிச்சயம் என்பதால் குரூப் 4 தேர்வை பல லட்சம் பேர் எழுதுகிறார்கள். இன்று நடைபெற்ற தேர்வை மொத்தம் உள்ள 3,935 பணியிடங்களுக்கு 13,89,738 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. 200 கேள்விகள் இடம் பெற்று இருந்தன.
எத்தனை பேர் ஆப்சென்ட்?
தேர்வை பொறுத்தவரையில், பிரிவு-அ-இல், தமிழ் தகுதித்தாள் தேர்வு 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கும், பிரிவு-ஆ-இல் பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு தாள் தேர்வு 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இன்று தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் சுமார் 2.40 லட்சம் தேர்வுக்கு வராமல் ஆப்செண்ட் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு இடத்துக்கு எத்தனை பேர் போட்டி?
இதன்படி பார்த்தால் மொத்தம் விண்ணப்பித்தவர்களில் 11.48 லட்சம் பேர் (தோராயமாக) தேர்வை எழுதியுள்ளனர். மொத்தம் உள்ள காலிப்பணியிடங்களுடன் ஒப்பிட்டால் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட 300 பேர் போட்டி போடுவதாக தெரிகிறது. கடந்த முறையை விட இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் பலரும் கூறினார். குரூப் 1, 2 , 2 ஏ தேர்வு வினாத்தாள் போல இருந்ததாக தேர்வர்கள் சிலரும் கூறுவதை பார்க்க முடிந்தது.
கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு வரும்?
கடினமாக இருந்ததாக தேர்வர்கள் பலரும் கூறியதை வைத்து பார்க்கும் போது இந்த முறை கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளது. அது போக குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் தற்போது 3,935 என அறிவிக்கப்பட்டாலும், வரும் நாட்களில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா?
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரும் இதே கருத்தையே கூறினார். இதனால், அரசின் துறைகளில் இருந்து வரும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப குரூப் 4 பணியிடங்கள் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வின் போது 6,244 ஆக இருந்தது, ஆனால் பின்னர் இது படிப்படியாக 9,532 ஆக அதிகரிக்கப்பட்டது.
எனவே நடப்பு ஆண்டிலும் குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தேர்வர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். தேர்வு முடிவுகளை மூன்று மாதத்திற்குள் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. எனவே அக்டோபருக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
.jpg)
Comments
Post a Comment