TNPSC Group 4 Exams: குரூப் 4 மறுதேர்வு நடத்தவில்லையென்றால் அதிமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.
அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை வருவாய் இன்ஸ்பெக்டர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் 3,935 காலியிடங்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வானது திட்டமிட்டபடி ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 11,48,019பேர் எழுதினர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வுகளில் குளறுபடிகள் நடந்துள்ளது. மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே குரூப்-4 தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறுதேர்வை நடத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருந்தார்.
மேலும் ''மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் இன்று பாபநாசம் தொகுதிக்குட்பட்ட அம்பர்லா பாயின்ட், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கூடியிருந்த மக்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது, " டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 13 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல் கிடைத்திருக்கிறது. சிலபஸில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை, அதனால் பதில் எழுதுவது கடினமாக இருந்ததால், பலரும் முழுமையாக எழுத முடியவில்லை. அதோடு தேர்வு முடிந்தபிறகு தேர்வுத்தாள்களை முறையாக சீல் வைத்து கொண்டுபோகவில்லை. அதனால் குரூப் 4 தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டும். அப்படி மறு தேர்வு நடத்தவில்லையென்றால் அதிமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும்." என்றார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அளித்த விளக்கத்தில், " தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, சீலிடப்பட்ட இரும்புப்பெட்டிகளில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 13.07.2025 காலை வரை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன.
இதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை.சேலம் மாவட்ட விடைத்தாள்களும் சீலிடப்பட்ட இரும்புப்பெட்டிகளில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 13.07.2025 அதிகாலை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப்பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன என்ற செய்திகளில் உண்மை இல்லை.இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மூன்று மாத காலத்திற்குள் வெளியிடப்படும்." எனக் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment