TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வை 11,48,019 பேர் எழுதியிருந்தனர்.


இதனால் ரிசல்ட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து உள்ளனர். இந்த நிலையில் குரூப் 4 ரிசல்ட் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம், தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. தமிழகத்தில் அரசு பணிக்கு காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது டிஎன்பிஎஸ்சிதான்.


குருப் 4 தேர்வு ரிசல்ட்


வருடம் தோறும் ஆண்டு கால அட்டவணையை வெளியிட்டு, டிஎன்பிஎஸ்சி அதற்கேற்றவாறு தேர்வுகளை வெளியிட்டு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2A உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், தேர்வர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பாக இருப்பது குரூப் 4 பணியிடங்கள்.


நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது, கொள்குறி வகையிலான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக வேலை என்பதால், தமிழகத்தில் பல லட்சக்கணக்கான, குறிப்பாக கிராமப்புற ஏழை எளிய மக்களின் அரசு கனவை நிறைவேற்றுவதாக குரூப் 4 தேர்வுகள்தான் உள்ளன.


முடிவுகள் எப்போது வெளியாகும்?


எனவே, இந்த குரூப் 4 தேர்வுகளை பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதுவதை பார்க்க முடியும். 10ஆம் வகுப்பு கல்வி தகுதி என்றாலும் கூட, பட்டப்படிப்பு, முதுகலை பட்டம் முடித்தவர்கள் கூட இந்த தேர்வுகளை எழுதுவதை பார்க்க முடியும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றன. 3,935 இடங்களுக்கு நடந்த இந்த தேர்வை 11,48,019 தேர்வர்கள் எழுதியிருந்தனர்.


இதன்படி பார்த்தால், ஒரு பதவிக்கு சுமார் 287 பேர் போட்டி போடுகின்றனர். இந்த தேர்வில் பாடத்திட்டங்களை தாண்டி வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததாகவும், தேர்வு மிகக் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கிடையே குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு


டிஎன்பிஎஸ்சி, குரூப் தேர்வுகளுக்கான முடிவுகள், தேர்வு முடிந்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படுகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட ஓராண்டுக்கு மேல் பிடித்தது. இது தேர்வர்களுக்கு பெரும் மன உளைச்சலையும் அதிருப்தியையும் கொடுத்தது.


கடந்த ஆண்டில் தேர்வு முடிந்து மூன்றே மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர், தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். குரூப் 4 தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, தற்போது தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் நடப்பதாக தெரிகிறது.


அடுத்த மாத இறுதிக்குள்


டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியது போல மூன்று மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால், அடுத்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தேர்தல் காலத்தில் தேர்வர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு கால அட்டவணையும் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog