தகுதித் தோ்விலிருந்து ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்-தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம்
இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னா் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியா்களுக்கும் தகுதித் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியது.
இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் வி. கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 23.08.2010-இல் அமலுக்கு வந்தது. இதை தமிழக அரசு 16.11.2012-இல் அமல்படுத்தியது. இந்தச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்துவதற்கு முன்பு பணியில் அமா்த்தப்பட்ட ஆசிரியா்கள் தகுதித் தோ்வு எழுத வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பிறகு, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களைத்தான் இடைநிலை ஆசிரியா்களாகவும், பட்டதாரி ஆசிரியா்களாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையடுத்து, 2009-க்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் இடைநிலை ஆசிரியா்களாகவும், பட்டதாரி ஆசிரியா்களாகவும் ஒவ்வொரு ஆண்டும் நியமிக்கப்பட்டு, பல பதவி உயா்வுகளையும் பெற்றனா். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்து 16 ஆண்டுகள் கடந்த பிறகு, தற்போது உச்சநீதிமன்றம் பணியில் உள்ள அனைத்து ஆசிரியா்களும் இரண்டு ஆண்டுகளில் தகுதித் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றாக வேண்டும். இல்லையெனில், அவா்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த தீா்ப்பு இயற்கை நியதிகளுக்கு முற்றிலும் முரணான தீா்ப்பு. கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் அமா்த்தப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியா்களுக்கும், இடைநிலை ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் தகுதித் தோ்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். மேலும், பணி ஓய்வு பெறும் வரை தொடா்ந்து பணியாற்றவும், பணிமூப்பு அடிப்படையில் உரிய பதவி உயா்வு பெறவும் மத்திய அரசின் சட்ட விதியில் திருத்தத்தை வருகிற நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் தமிழக எம்பிக்கள் சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வந்து ஆசிரியா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
இதுதொடா்பான கோரிக்கை மனுவை தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வனிடம் வழங்கினோம் என்றாா் அவா்.
Comments
Post a Comment