CBSE 10,+2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது... பிப்.17 முதல் தேர்வுகள்... முழு அட்டவணை!





மத்திய பாடத்திட்டக் கல்விக் குழு (CBSE) 2026ம் ஆண்டுக்கான பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை வெளியிட்டுள்ளது.


முன்பே அறிவித்தபடி, இரு வகுப்புகளுக்கும் தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 முதல் துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த செப்டம்பர் 24 அன்று வெளியிடப்பட்ட தற்காலிக (tentative) அட்டவணையைத் தொடர்ந்து, சில நாட்கள் கழித்து இறுதி அட்டவணை வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ கடந்த 2025 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகளை வெளியிடும் போது, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் என்றும், புதிய கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரையின்படி பத்தாம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை போர்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.


 


இது குறித்து சிபிஎஸ்இ தெரிவித்ததாவது, "மாணவர்களும் பள்ளிகளும் தயாராக இருக்கும் வண்ணம், வரவிருக்கும் தேர்வுகளுக்கான தற்காலிக அட்டவணையை 146 நாட்களுக்கு முன்பே வெளியிட்டோம். தற்போது அனைத்து பள்ளிகளும் தங்கள் பாடப்பிரிவு விவரங்களை (LOC) சமர்ப்பித்துள்ளதால், இறுதி பாடத்திட்ட அடிப்படையில் புதிய அட்டவணை 110 நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது" என கூறியுள்ளது.




அட்டவணை தயாரிப்பில் CBSE பல அம்சங்களை கவனத்தில் கொண்டுள்ளது. குறிப்பாக,


ஒரே மாணவர் தேர்வு எழுதும் இரண்டு பாடங்கள் ஒரே நாளில் வராதபடி 40,000-க்கும் மேற்பட்ட பாட இணைப்புகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.


மாணவர்களுக்கு போதுமான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.


தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் (JEE Main போன்றவை) CBSE தேர்வுகளுடன் மோதாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மதிப்பீட்டு பணிக்காலத்தில் ஆசிரியர்கள் நீண்டகாலம் பள்ளிகளில் இருந்து விலகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


அனைத்து தேர்வுகளும் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்கும். CBSE, இதுவரை இல்லாத வகையில், தேர்வு துவங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பே முழுமையான அட்டவணையை வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


அட்டவணை முன்னதாக வெளியிடப்படுவதால் மாணவர்கள் தங்களின் தேர்வுக்கான தயாரிப்பை நன்கு திட்டமிட முடியும். அதேபோல், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளும் தங்களின் கோடை விடுமுறை மற்றும் மதிப்பீட்டு திட்டங்களை நேரத்துக்கு முன்பே அமைக்க உதவியாக இருக்கும்.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம், சமூக அறிவியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 வரை நடைபெறவுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், இரசாயனவியல், கணிதம், உயிரியல், கணக்கியல், பொருளாதாரம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும்.


புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இருமுறை போர்டு தேர்வு நடைபெறுவது இந்த ஆண்டின் சிறப்பம்சமாகும்.

Comments

Popular posts from this blog