NEET UG 2026: விண்ணப்பப் பதிவு எப்போது ஆரம்பம்? தேர்வு தேதியை முன்கூட்டியே அறிவிக்க என்.டி.ஏ. திட்டமா?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையையும், தேசியத் தேர்வு முகமை (NTA) ஜி மெயின்ஸ் தேர்வு தேதிகளையும் அறிவித்துள்ள நிலையில், தற்போது அனைத்து மாணவர்களின் கவனமும் இந்தியாவில் இளங்கலை மருத்துவக் கல்விக்கு நுழைவாயிலாக இருக்கும் மற்றொரு முக்கியத் தேர்வான நீட் யுஜி 2026 (NEET UG 2026) மீது திரும்பியுள்ளது.
தேசியத் தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் யுஜி 2026 தேர்வுக்கான அட்டவணையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் உள்ள மருத்துவ ஆர்வலர்களுக்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கும்.
எதிர்பார்க்கப்படும் தேதி மற்றும் முக்கிய விவரங்கள்
முந்தைய ஆண்டுகளில் வெளியான அறிவிப்பு தேதிகளின் அடிப்படையில் பார்க்கையில், நீட் யுஜி 2026 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஜனவரி 2026-ன் இறுதியில் அல்லது பிப்ரவரி 2026 முதல் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
நீட் யுஜி 2023: அறிவிக்கை மார்ச் 6 அன்று வெளியானது. பதிவு ஏப்ரல் 6 வரை நடந்தது.
நீட் யுஜி 2024: அறிவிக்கை பிப்ரவரி 9 அன்று வெளியானது. பதிவு மார்ச் 16 வரை நீட்டிக்கப்பட்டது.
நீட் யுஜி 2025: பிப்ரவரி 7 அன்று அறிவிக்கை வெளியானது. பதிவு மார்ச் 7 வரை நடைபெற்றது.
இதனை கருத்தில் கொண்டு, நீட் யுஜி 2026 அறிவிக்கை ஜனவரி 2026 இறுதிக்குள் வெளியாகலாம் என்றும், விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி முதல் வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை நடத்தப்படலாம் என்றும் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த முன்கூட்டிய அறிவிப்பும் பதிவு காலமும், மாணவர்கள் விண்ணப்பங்களை நிரப்பவும், விவரங்களைச் சரிபார்க்கவும், நாட்டிலேயே மிகவும் போட்டி நிறைந்த மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகவும் போதுமான அவகாசத்தை அளிக்கும்.
தேர்வு பற்றிய முக்கிய கண்ணோட்டம்
நீட் யுஜி என்பது இந்தியாவில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும். 2025-ல் 22 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுடன், நீட் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக உள்ளது.
கல்வி அமைச்சகம், தேர்வுப் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தீர்க்கும் வகையில், நீட் யுஜி தேர்வை கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT - Computer-Based Test) மாற்றலாமா என்று பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார அமைச்சகத்துடனான விவாதங்கள் இருந்தபோதிலும், இந்த மாற்றம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. எவ்வாறாயினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல், அறிவிக்கையுடன் வெளியாகலாம்!
விண்ணப்பதாரர்களுக்கான முக்கியமான வழிகாட்டுதல்கள்
மாணவர்கள் நீட் யுஜி 2026-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தவறாமல் கண்காணித்து, விண்ணப்ப வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
விண்ணப்பத்தில் கொடுக்கப்படும் பெயர், தொடர்பு விவரங்கள், முகவரி, பிரிவு, கல்வித் தகுதிகள், பிறந்த தேதி போன்ற விவரங்கள் இறுதியானவை. உறுதிப்படுத்தும் பக்கம் உருவாக்கப்பட்ட பிறகு அவற்றில் திருத்தம் செய்ய முடியாது.
அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் அனுப்பப்படும் என்பதால், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வழங்குவது கட்டாயமாகும்.
இந்தத் தகவல்கள் மருத்துவக் கனவுடன் காத்திருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருங்கள்!

Comments
Post a Comment