ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு: 56,000 பேர் ஆப்சென்ட்; தாள் 1, 2 எப்படி இருந்தது? தேர்வர்கள் கருத்து என்ன?
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர கட்டாயமான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2024-ம் ஆண்டுக்கான தாள்-1, தாள்-2 ஆகிய தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த ஆண்டு தேர்வெழுதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதும், இரு தேர்வுகளிலும் சேர்த்து 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்ட அறிவிப்பின்படி,
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விவரம்:
தேர்வு விண்ணப்பித்தவர்கள்
தாள்-1 (இடைநிலை ஆசிரியர்கள் - 1 முதல் 5 வகுப்பு) 1,07,370 பேர்
தாள்-2 (பட்டதாரி ஆசிரியர்கள் - 6 முதல் 8 வகுப்பு) 3,73,438 பேர்
மொத்தம் 4,80,808 பேர்
தேர்வு எழுதியோர் மற்றும் ஆப்சென்ட் விவரம்:
தேர்வு தேர்வு நடந்த நாள் தேர்வு எழுதியோர் ஆப்சென்ட்
தாள்-1 நவ.15 92,412 பேர் 14,958 பேர்
தாள்-2 நவ.16 3,31,923 பேர் 41,515 பேர்
மொத்தம் - 4,24,335 பேர் 56,473 பேர்
வினாத்தாள் குறித்த தேர்வர்களின் கருத்து:
தாள்-1 தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் (நவ.15) நடந்த தாள்-1 தேர்வு வினாக்கள் எளிதாகக் கேட்கப்பட்டதாகத் தேர்வர்கள் தெரிவித்தனர்.
தமிழ் (Language I) இலக்கணம், இலக்கியம், உரைநடை அனைத்தும் கலந்து எளிதாக இருந்தது. கணிதம் (Mathematics) மிகவும் எளிதான பகுதி என்றும், எண்கள் மற்றும் கோணங்கள்/வடிவியல் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன என்றும் அதிக தேர்வர்கள் கூறினர்.
ஆங்கிலம் (Language II) எளிதான பிரிவுகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. சுற்றுச்சூழல் ஆய்வுகள் பகுதியும் எளிதாகவே இருந்தது. பெரும்பாலான கேள்விகள் பள்ளிப் புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பகுதி கடினமாக "படித்து விடையளிக்கும்" வகையில் இருந்ததாகப் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். கேள்விகள் பெரும்பாலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான தரத்தில் இருந்தன. ஒருசில உயர் மட்டக் கேள்விகள் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் இருந்ததாகத் தேர்வர்கள் குறிப்பிட்டனர்.
தாள்-2 (பட்டதாரி ஆசிரியர்கள்): நேற்று (நவ.16) நடைபெற்ற தாள்-2 தேர்வும் சற்று எளிதாக இருந்ததாகத் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். தமிழ் பாடப்பகுதி மிகவும் எளிதாக இருந்ததாகப் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களும் எளிமையாகவே இருந்தன.
உளவியல் (Psychology) பாடப்பகுதி மட்டும், வழக்கம்போல அதிக அளவில் சிந்தித்து பதிலளிக்கும் விதமாக இருந்ததாகவும், பல ஆசிரியர்களின் பெயர்களைக் கொண்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேர்வு முறைகளான ஓ.எம்.ஆர் (OMR) மற்றும் சி.பி.டி (CBT - கணினி வழித் தேர்வு) ஆகியவற்றில் எது சிறந்தது என்பது குறித்து தேர்வர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவின. பெரும்பாலான தேர்வர்கள் ஓ.எம்.ஆர் முறையே சிறந்தது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர். சி.பி.டி முறையில் சிலருக்குத் தாமதம் ஏற்பட்டதாகவும், மேலும் பல தேர்வர்களுக்கு அந்த முறையை இயக்குவதற்குத் (Operate) தெரியவில்லை என்றும் கூறினர்.

Comments
Post a Comment