முதுநிலை ஆசிரியர் தேர்வில் அதிர்ச்சி..!! தமிழ் பாடத்தில் 85,000 பேர் தோல்வி..!! 20 மதிப்பெண் கூட வாங்கல..!!
தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய 1,996 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 2.36 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் எழுதினர்.
நேற்று (நவம்பர் 29) வெளியான தேர்வு முடிவுகள், தமிழகக் கல்வித் தரம் குறித்துக் கவலையளிக்கும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளன.
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் சேரும் நபர்களுக்குத் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யும் நோக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் மொத்தமுள்ள 50 மதிப்பெண்களில், 20 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, விண்ணப்பதாரரின் பிரதானப் பாடம் சார்ந்த விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற விதி உள்ளது.
வெளியான முடிவுகளின்படி, தேர்வு எழுதியவர்களில் 85,000-க்கும் மேற்பட்டோர், அதாவது சுமார் 36% பேர், இந்தத் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 20 மதிப்பெண்களைக் கூடப் பெறாமல் தோல்வி அடைந்துள்ளனர். முதுநிலை பட்டதாரிகள் தங்கள் தாய்மொழியான தமிழிலேயே தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வர்கள் தங்கள் பிரதானப் பாடம் சார்ந்த தேர்வில் மிகச் சிறப்பாக மதிப்பெண் பெற்றிருந்தாலும், கட்டாயத் தமிழில் தோல்வியடைந்த காரணத்தால், அவர்களின் முக்கியத் தேர்வுத்தாள்கள் திருத்தப்படாமல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்வை எழுதியவர்கள் இளநிலை, முதுநிலை மற்றும் கல்வியியல் என குறைந்தபட்சம் 3 பட்டங்களைப் பெற்றவர்கள். சிலர் எம்.ஃபில் (M.Phil), பிஎச்.டி (Ph.D) போன்ற உயரிய முனைவர் பட்டங்களைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தப் போட்டித் தேர்வின் கட்டாயத் தமிழ் பாடத்தின் கேள்விகள் வெறும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் தரத்தில் மட்டுமே இருந்தன.
அப்படியிருந்தும், 40 சதவீத மதிப்பெண்களை கூட பெற முடியாமல் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பட்டதாரிகள் தோல்வியடைந்துள்ளது, கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்வியாளர்கள் இந்தக் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்துப் படிக்காத நிலை உள்ளது. தமிழை இரண்டாம் பாடமாக எடுத்தால்கூட, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதன் விளைவுதான் இந்த அவல நிலை. பிரதானப் பாடத்தில் தேர்ச்சி பெற்றும், ஆசிரியர் பணியில் சேர முடியாமல் பலரின் எதிர்காலம் வீணாகியுள்ளது” என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும், “முனைவர் பட்டம் பெற்றவர்களும், ஐந்து பட்டங்களைப் பெற்றவர்களும் தங்கள் தாய்மொழியில் 20 மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது நமது கல்வி முறையின் மோசமான நிலையைக் காட்டுகிறது. இது மிகவும் அவமானகரமானது” என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment