PG TRB Results: ஷாக்... பி.ஜி டி.ஆர்.பி தேர்வில் தமிழில் மட்டும் 80,000 பேர் ஃபெயில்; இது எப்படி நடந்தது?
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PGTRB) தேர்வு முடிவுகளை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1996 காலிப்பணியிடங்களுக்காக கடந்த அக். 12 அன்று நடைபெற்ற இத்தேர்வை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 809 மையங்களில் 2,20,412 தேர்வர்கள் எழுதினர்.
CV பட்டியல் வெளியீடு:
அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 1:1.25 என்ற விகிதத்தில் தேர்ச்சிப் பட்டியல் (Shortlist) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு (CV) நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புக் கடிதத்தை (Call Letter) டிஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். தபால் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தமிழ் தகுதித் தேர்வில் 84,000 பேர் தோல்வி
மறுபுறம் பிஜி டிஆர்பி தேர்வில், தமிழ் தகுதித் தேர்வில் (Tamil Eligibility Test) மட்டும் சுமார் 84,000 பேர் தோல்வியடைந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலானோர் தமிழ்த் தகுதித் தேர்வுக்குத் தேவையான முக்கியத்துவம் அளிக்காததே இவ்வளவு பெரிய தோல்விக்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பல தேர்வர்கள், குறிப்பாக ஆங்கிலம் மற்றும் கணிதம் போன்ற பிற துறை சார்ந்தவர்கள், தமிழ் தகுதித் தேர்வுக்குத் தேவையான முக்கியத்துவத்தை வழங்கவில்லை. "இது வெறும் தகுதித் தேர்வுதான்" என்ற அலட்சிய மனப்பான்மையுடன் தயாராகியுள்ளனர்.
பிஜிடிஆர்பி தேர்வில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தது 20 மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகத்தை மட்டும் படித்திருந்தாலோ அல்லது முந்தைய வினாத்தாள்களைப் பார்த்திருந்தாலோ கூட இந்த 20 மதிப்பெண்களை எளிதில் எடுத்திருக்க முடியும்.
தேர்வு அறிவிப்பு, நோட்டிபிகேஷன் அல்லது ஹால் டிக்கெட் வந்த பிறகுதான் பலரும் படிக்கத் தொடங்கினர். சரியான திட்டமிடல் மற்றும் நேரமின்மை காரணமாக தமிழ்த் தகுதித் தேர்வில் கவனம் செலுத்தவில்லை.
ஆங்கிலத் துறை தேர்வில் 41,000 பேர் கலந்துகொண்ட நிலையில், அதில் 18,000 பேர் தமிழில் தகுதி பெறவில்லை. கணிதத் துறையிலும் 40,000 பேரில் 13,000 பேர் தோல்வியடைந்துள்ளனர். தமிழ் மாணவர்கள்கூட சுமார் 5,000 பேர் அலட்சியத்தால் தோல்வி அடைந்துள்ளனர்.
தமிழ் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களில் பலர், மேஜர் பாடங்களில் நல்ல மதிப்பெண்களை (110, 120+) எடுத்திருந்தும், தகுதியிழப்பு (Disqualified) காரணமாக வேலை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். இந்தச் சிறிய தவறு, கடினமாக உழைத்த பலரின் கனவைச் சிதைத்துள்ளது.
அடுத்த தேர்வுக்குத் தயாராக என்ன செய்ய வேண்டும்?
தமிழ் தகுதித் தேர்வை சிலபஸின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதி, அதற்குத் தனி கவனம் செலுத்துங்கள். டிஆர்பி சிலபஸ் வெளியிட்டவுடன் படிப்பைத் தொடங்குங்கள். அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுங்கள். அடுத்த பிஜி டிஆர்பி, யூஜி டிஆர்பி அல்லது டெட் போன்ற தேர்வுகளுக்கான இலக்கை நிர்ணயித்து, முழு வீச்சில் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

Comments
Post a Comment