டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறார். இது குறித்து சட்ட்ஆலோசனை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
நம்முடைய வரிப்பணத்தை தான் ஒன்றிய அரசிடம் கேட்கிறோம். பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கடந்த இரு வருடங்களாக சில கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள்.
இதனால் குழந்தைகள், ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே வேலையில் சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறது. மத்திய கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து, கல்வி தொகையினை கேட்டும் இதுவரை கொடுக்காமல் வஞ்சித்து வருகின்றனர்,' என தெரிவித்தார்.
த.வெ.க தலைவர் விஜய் திருச்சியில் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, 'இதுவரை தொலைக்காட்சி பார்க்கவில்லை. கூட்டம் என்பது அதிக அளவில் வந்திருக்கும் என சொன்னார்கள். அதை பார்த்துவிட்டு எனது கருத்தை சொல்கிறேன்.
கூட்டம் என்பது வேடிக்கை பார்க்க வருகிறார்கள், அந்த தம்பிகள் வீட்டில் அரசின் பயனாளிகள் இருப்பார்கள். தமிழ் புதல்வன் மூலமாகவோ, மகளிர் உதவி தொகை மூலமாகவோ, காலை உணவு திட்டம் மூலமாக அவர்கள் குடும்பத்தினர் பயனடைந்து இருப்பார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதை இந்த திராவிட மாடல் அரசு செய்து கொண்டிருக்கிறது, என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.